வெற்றிகரமான வாழ்க்கைக்காக வாசிப்போம்!

வெற்றிகரமான வாழ்க்கைத் துறைக்கு கல்வித் துறையில் முக்கிய இடம் வகிக்கின்றது வாசிப்பு. கல்வியறிவு இல்லாதவன் கண்கெட்ட குருடனுக்கு உவமானமாவது போல் வாசிப்பு என்பது ஒரு மனிதனிடம் இல்லை என்றால் அவன் ஒரு பூரண மனிதனாக திகழ முடியாது.

கல்வித்துறை வரலாற்றிலேயே வாசிப்பு முக்கிய இடத்தைப்பெறுகின்றது மாறிவரும் நவீன சூழ்நிலைகளுக்கேற்ப கருத்துக்களை உள்வாங்குவதற்கும், செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும், வாசிப்பே கை கொடுக்கின்றது.

ஆரம்பகால மனிதர்கள் செவிவழிப் போதனைகளை வழங்கி வந்தார்கள். பின்வந்த காலங்களில் செவிவழிப்போதனையுடன் எழுத்து,வாசிப்பு என்பவற்றின் மூலமாகவும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றது.

ஒருவன் தான் பிரயோகிக்கும் மொழியில் விருத்தியடைய வேண்டுமாயின் அவன் வாசிப்பில் நாட்டம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். வாசிப்பில் திறமை காட்டுகின்ற ஒரு மாணவன் தான் ஏனைய பாடங்களிலும் திறம்பட பிரகாசிக்க முடிகின்றது. அதேவேளை வாசிப்பில் இடர்படுகின்ற மாணவன் ஒருவன் ஏனைய பாடங்களிலும் இடர்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் வாசிப்பில் இடர்படுவதாக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனடிப்படையில் மெல்லக்கற்கும் மாணவர்களின் வாசிப்புத்திறன் மிகவும் குறைவடைந்து காணப்படுகின்றது. க.பொ.த (சா/த) மற்றும் உயர்தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள்கூட இன்று வாசிப்பில் இடர்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது. எழுத்துக்களை உச்சரிப்பது, எழுத்துக்களை இனங்காண்பது, நிறுத்தற்குறிகளை அனுசரித்து வாசிக்காமை, ளகர லகர வேறுபாடுகள், ணகர னகர வேறுபாடுகள், றகர, ரகர வேறுபாடுகள் என்பவற்றை உணர்ந்துகொள்ளாமை என்பன குறைபாடாக உள்ளது.

வாசிப்பில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களை டிஸ்லெக்ஸியா (Dislegsiya) எனும் பெயர்கொண்டு அழைக்கின்றார்கள். உடல் உள குறைபாடுகளைக்கொண்ட விசேட தேவையுள்ள மணவர்கள் திறம்பட வாசிப்பதில் சிக்கல்களுக்கு முகம்கொடுக்கின்றனர். பார்வைக்குறைபாடு, செவிப்புலக் குறைபாடு, நரம்புகளிடையே இயக்கம் சீராக இன்மை, நற்சிந்தனை போன்ற பல குறைபாடுகளைக் கொண்ட மாணவர்கள் சீரற்ற வாசிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ச்சியாக பாடசாலைக்கு வராத மாணவர்களும் வாசிப்பில் இடர்படுகின்றனர். அதேவேளை வகுப்பொன்றில் காணப்படும் அதிகரித்த மாணவர் தொகையும் வாசிப்புக்கு இடர்பாட்டைக் கொடுக்கின்றது.

வாசிப்புக்குறித்து புறூக்ஸ் போன்ற அறிஞர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வாசிப்பதற்கு பல்வேறு திறமைகள் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளதை பல பத்திரிகைகளில் அறிந்துள்ளோம். எனவே இதற்கேற்ப மொழி பற்றிய திறன்கள் மாணவர்களுக்கு தேவையாகும் பேசும் மொழியின் தன்மையினைத் தெரிந்திருக்கவேண்டும் எழுத்துக்களை அறிந்திருப்பதோடு, கதைக்கும் மொழியின் ஓசைகளை வேறுபடுத்தும் தன்மையினையும் கண்களை இடமிருந்து வலமாக கொண்டு செல்லும் திறமையும் இருக்க வேண்டும்.

ஏதாவது தொழிலில் வெற்றிகண்ட நூற்றுக்கணக்கான தொழிலதிபரிடம் காணப்படும் குணாதிசயங்கள் பலவற்றுள் வாசிப்பும் ஒன்றாக இடம்பெற்றிருக்கும் என்பது கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மா.கருணாநிதியின் கருத்தாகும். இது குறித்து அவர் தெரிவிக்கையில் ஒருவருக்கு வாசிப்பின் முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்படுவதுடன் அது வாழ்க்கைக் காலம் முழுவதும் தொடர்ந்து இடம்பெறவேண்டுமென்பதையும் வலியுறுத்தல் வேண்டும். பாடசாலைக் காலத்திலேயே இத்தகைய பழக்கத்தினை விதைக்கும் பொறுப்பும் போதிய ஊக்குவிப்பினை வழங்கும்பொறுப்பும் ஆசிரியர்களைச் சார்ந்ததாகும் என்கின்றார்.

எனவே ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை அவன் வாசிக்கும் நூல்களிலிருந்தும் அவன் வைத்திருக்கும் புத்தகத் தொகுதிகளைக் கொண்டும் அறிந்துகொள்ள முடியும். அலெக்ஸாண்டர் மன்னன் நூல்களை வாசிப்பதில் பெரும் விருப்பமுடையவன். தத்துவஞானி அரிஸ்டோட்டில் போருக்குச் செல்லும்போது ஹோமரின் காவியங்களையும் கூடவே எடுத்துச்செல்வார்.

எமது கல்வி முறையின் அம்சங்கள் பல இளைஞர்களின் பொது வாசிப்புப் பழக்கத்தின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக உள்ளது. மாணவர்களின் நூல் நிலைய படிப்பிற்கோ சுய தேடலுக்கோ அதிக இடம் இல்லாதிருப்பது வருந்தத்தக்கது என்பது பேராசிரியர் சோ.சந்நிரசேகரனின் ஆதங்கமாகும்.

வாசிப்புப்பழக்கமானது பலதரப்பட்ட சிந்தனைகளை மனதில் தூண்டி விடுகின்றது சிந்தனைகள் ஒரு வழிப்போக்காக அமைந்துவிடக்கூடாது. புத்தகங்கள் மனித வாழ்வில் திருப்பு முனைகளை ஏற்படுத்தக்கூடியன. பல நூல்கள் மனித வரலாற்றில் புரட்சிகள் ஏற்பட வித்திட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் நிகழ்ந்த சோசலிச புரட்சிகளுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனமும் கம்யூனிஸ் கட்சி அறிக்கைகளும் களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. பாரசீக நாட்டின் அப்துல் கசீம் என்ற போர்த்தலைவன் வாசிப்பதில் வெறிபிடித்து தன்னிடமிருந்த ஒரு இலட்சத்து 17 ஆயிரம் புத்தகங்களை சென்ற இடமெல்லாம் ஒட்டகத்தின் மீது ஏற்றிச் சென்றுள்ளான் என்பதை அறிய முடிகின்றது.

இளம் வயது தொட்டே பிள்ளைகளிடத்தில் வாசிப்பு விருத்தி குறித்த நடவடிக்கைகளில் முயற்சிகளை மேற்கொள்வது சிறந்த பலனைத்தரும் மாணவர்களிடம் வினாக்களை வினவும்போது ஒரு சொல்லில் விடையளிப்பதை தவிர்த்து பல சொற்கள் கொண்டு விடையளிக்கும் நிலையினை ஆசிரியர்கள் உருவாக்கவேண்டும். மாணவர்களின் சொற்களஞ்சிய விருத்திக்கு உதவும் பொருட்டு மாணவர்களுடன் அவர்கது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளல், கதைகளை ஒழுங்கமைத்து கூறி விடுதல், கட்டுரைகளை எழுதிவிடல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மெதுவாக வாசிக்கும் மாணவர்களின் அபிவிருத்தி கருதி மின் அட்டை காட்டுதல், விருப்பமான தலைப்பில் எழுதவிடல், மாதிரிகளை வாசித்துக்காட்டுதல், குழுவாக வாசித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதில் ஆசிரிய நூலகர்களின் பங்கு குறித்தும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆசிரிய நூலகர்கள் கல்வி வழங்களை ஒழுங்கமைத்து பயன்படுத்துவதிலும், உதவுவதிலும், ஒருங்கிணைப்பதிலும், முக்கிய பங்கை ஆற்றுதல் வேண்டும்.

எதனையும் துறந்து விடலாம் ஆனால் வாசிப்பினால் பெற்ற அறிவை மட்டும் துறந்து விட முடியாது எனவே இதனை உணர்ந்து இத்துணைச் சிறப்புடைய வாசிப்பை இளைஞர் மற்றும் சிறுவர்களிடையே ஊக்குவிக்க உறுதி பூணுவோமாயின் எதிர்கால சமுதாயத்தில் நல்லதொரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதோடு நல்லதொரு பிரஜைகளையும் உருவாக்கலாம்.
Share on Google Plus

About Education Murasu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment