வடமாகாணத்தில் கல்விச் சீரழிவுக்கு காரணம் யார்? நடக்கின்றது சீரழிவு!! தடுப்பவர் யாரோ??


வடக்கின் கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் சீரழிவைப்பற்றித் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ‘மாணவர்கள் மீது ஆசிரியர் வன்முறை’, ‘துஸ்பிரயோகம்’ என்பது தொடக்கம் ‘கல்வி நிலையில் வீழ்ச்சி’ என்பது வரை ஏராளம் செய்திகள் தினமும் வந்து கொண்டிருக்கின்ற. இந்தச் செய்திகளால் மனம் பதற்றத்துக்குள்ளாகிறது.

மனம் மட்டுமல்ல, சமூகமே பதற்றமடைகிறது. இந்தச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைக் காணவில்லை என்பதும் கல்வி மேம்பாட்டுக்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவில்லை என்பதும் சமூகத்தின் தொடரும் பதற்றத்துக்குக் காரணமாகின்றன.

தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பாதகமான செய்திகளையெல்லாம் கல்வித்துறையினர் கண்டும் காணாதிருப்பது ஏன்? கல்வித்துறையைப் பற்றி நீதிபதிகள் பொதுவெளியில் கண்டனம் தெரிவித்துக் கருத்துச் சொல்லும் அளவுக்கு கல்வி அமைச்சும் அதனுடைய நிர்வாகமும் இடமளித்துக் கொண்டிருப்பது எதற்காக? ஊடகங்களும் மக்களும் கண்டபடி கதைக்கும் அளவுக்கு நிலைமை கீழிறங்கிக் கொண்டிருக்கும்போது, அதைக் கட்டுப்படுத்துவதற்கான தன்னுடைய பொறுப்பை உணராமலும் ஏற்றுக்கொள்ளாமலும் எதற்காகப் பிடிவாதமாக மௌனம் சாதிக்கிறது கல்வித்துறை? குறிப்பாகக் கல்வி அமைச்சு? என்பதே பலருடைய இன்றைய கேள்விகளாகும்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நிச்சயமாக வடக்கின் கல்வி அமைச்சுப் பதில் சொல்லப்போவதில்லை. அது இவற்றையெல்லாம் பொருட்படுத்தப்போவதுமில்லை. ஏற்கனவே சில இடங்களில் கல்வி நிர்வாக ஒழுங்கின்மைகளுக்கும் நீதியற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக மக்களாலும் மாணவர்களாலும்  போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தப்போராட்டங்களின் நியாயத்தன்மையை கல்வி அமைச்சு உணர்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை. அவற்றைக் கருத்திற் கொண்டு அவற்றுக்கு மதிப்பளிக்கவும் இல்லை.

 “இப்படியான போராட்டங்களும் எதிர்ப்பும் வந்தால், அதைப்பற்றி கண்டு கொள்ளாதீர்கள். இரண்டொரு நாளிலோ இரண்டொரு வாரங்களிலோ போராட்டத்தை முன்னெடுப்போர் களைத்துச் சலித்து கைவிட்டு விடுவார்கள். அதன்பிறகு எல்லாம் வழமையாகி விடும்“ என்று அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இது உண்மையா இல்லையா என்பதற்கு அப்பால், நிலைமைகளைக் கூர்மையாக  அவதானித்தால் அப்படி அவர் சொல்லியிருக்கக் கூடும் என்று நம்பும்படியாகவே நிலைமைகள் உள்ளன.

உதாரணமாகக் கிளிநொச்சி, கனகபுரம் மகாவித்தியாலயத்தில் அதிபர் நியமனத்தை எதிர்த்து பெற்றோராலும் பழைய மாணவர்களாலும் நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தை கல்வி அமைச்சர் கையாண்ட விதம் இதை நிரூபிக்கிறது. உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றவேளை தவிர்க்க முடியாமல் அங்கே வந்த கல்வி அமைச்சர், “உங்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து சில நாட்களில் நடவடிக்கை எடுக்கலாம்“ என்று பொதுவாகச் சொன்னார். இந்தப்பதிலில் திருப்தியற்றிருந்த போராட்டக்குழுவினர், காலக்கெடுவொன்றை விதித்து, அந்தக் காலப்பகுதிக்குள் தீர்வைத்தருமாறு கேட்டனர். “பார்க்கலாம்“ என்று சொல்லிவிட்டுச் சென்ற கல்வி அமைச்சர், பின்னர் உரிய தீர்வைக் கொடுக்கவில்லை.

அப்படியே ஆறப்போட்டு, பிரச்சினையை பழைய கஞ்சியாக்கி விட்டார். இதனால் மிகக் கோபமும் சலிப்புமடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மக்களும் பழைய மாணவர்களும். ஆனாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வேண்டுமானால், அடுத்த தேர்தலுக்கு “மச்சான் வரட்டும். அப்பொழுது பார்த்துக்கொள்கிறோம்“ என்று சொல்லிக் கொள்ளலாம். வேறு எதுவும் செய்ய முடியாது.

வேண்டுமானால், “இதைப்பற்றி முதலமைச்சருக்குக் கடிதம் எழுதுங்கள். அவர் கவனித்துக்கொள்வார்“ என்று சிலர் சொல்லக்கூடும். இதைப்போலப் பல பிரச்சினைகளுக்கு அவற்றைக் குறிப்பிட்டு முதலமைச்சருக்கு எழுதிய கடிதங்களுக்கெல்லாம் ஒருவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லை. இது கல்வி அமைச்சருக்கும் தெரியும். நிர்வாகிகளுக்கும் தெரியும். ஆகவே நீங்கள் எங்கே தெரியப்படுத்தினாலும் அவர்கள் கவலைப்படப்போவதில்லை. பதிலாக காலை ஆட்டிக்கொண்டு புரியாணி சாப்பிடுவார்கள்.

இதைப்போலக் கிளிநொச்சி ம.வியின் அதிபர் நியமனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்திலும் கல்வி அமைச்சு குழப்பமான நடவடிக்கைகளையே மேற்கொண்டது. மாதக்கணக்கில் இழுபட்ட இந்தப்பிரச்சினையிலும் கல்வி அமைச்சர் “பாராநிலைப்போக்கையே“ கடைப்பிடித்தார். “நிர்வாகத்தில் தலையிட விரும்பவில்லை“ என்று அவர் கூற முற்படலாம். இந்தப் பதில் ஏற்புடையதல்ல. ஏனென்றால், சில வலயங்களில் அவர் வலயக்கல்விப்பணிப்பாளர்களைக் கடந்து அங்குள்ள நிர்வாக உத்தியோகத்தர்களுடனும் கணக்காளர்களுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டு கட்டளைகளைப்பிறப்பிக்கிறார். விவரங்களைக் கேட்டறிகிறார். இது முறையற்ற தலையீடாகும். இந்த மாதிரி ஒரு காலம் ஆளுநர் தலையீடுகளைச் செய்தபோது கொதித்தெழுந்தவர் இந்த முன்னாள் கல்விப்பணிப்பாளர் என்று சுட்டிக்காட்டுகிறார் ஒரு அதிகாரி. அப்படியென்றால், கல்வி அமைச்சர் இப்பொழுது கல்வி அமைச்சராகச் செயற்படுகிறாரா? அல்லது சில வலயங்களின் பணிப்பாளராகப் பணியாற்றுகிறாரா? என்றும் அந்த அதிகாரி கேட்கிறார்.

இதைத் தவிர, மறுபுறத்தில் ஒரு பிரச்சினை மாதக்கணக்கில் தொடரும்போதும், அந்தப்பிரச்சினையைப்பற்றிய செய்திகள் பகிரங்கமாக அனைத்து ஊடகங்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கும்போதும் ஆசிரியர்களும் மாணவர்களும் குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றபோதும் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல், அந்தத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் “ஞானநிலை“யில் இருப்பது சரியானதா? ஆனால், அப்படியான ஒரு மனோபாவத்தில்தான் கல்வி அமைச்சர் இருக்கிறார் என்று அவரை நன்கறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

இப்படிக் கல்வி அமைச்சு பாராமுகமாகக் “கள்ள மௌனம்“ சாதிக்கும்போது நிலைமை மேலும் மேலும் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஊடகங்கள் தங்கள் பாட்டுக்குக் கல்வித்துறையைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் செய்திகளை வெளியிட்டுக்கொண்டேயிருக்கின்றன.

இப்பொழுது கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் இதேபோன்றதொரு பிரச்சினையில் எரிந்து கொண்டிருக்கிறது. இரண்டு பேர் அந்தப்பாடசாலைக்கு அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு அதிபர் பாடசாலையை நடத்திக்கொண்டிருக்கிறார். இன்னொரு அதிபர் மரத்துக்குக் கீழே புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார். இரண்டையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ஆசிரியர்களும் மாணவர்களும். இதைப்பற்றிச் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கிறது கல்விச் சமூகம். ஒரு பாடசாலைக்கு இரண்டு அதிபர்களா?! என்று கேள்விக்குறியோடும் வியப்புக்குறியோடும் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன ஊடகங்கள். வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் கோட்டக்கல்விப்பணிப்பாளருக்கும் ஒரே குழப்பம். இந்தப் பிரச்சினையை என்ன செய்வது என்று அவர்களுக்குப் புரியவேயில்லை. இதைப்பற்றி கல்வி அமைச்சின் செயலாளரிடம் கேட்டால், அவர் எரிந்து விழுகிறார். இடையில் இரண்டு அதிபர்களையும் செயலாளரும் வலயக்கல்விப்பணிப்பாளரும் தனித்தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார்கள். இரண்டு அதிபர்களும் அந்தப் பாடசாலையை விட்டு வேறு பாடசாலைக்குப் போக மறுத்து விட்டனர். இந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியவில்லை ஒருவருக்கும். இதற்கும் தீர்ப்புமில்லை. தீர்வுமில்லை.

ஆனால், “இந்தமாதிரிப் பிரச்சினைகளுக்கெல்லாம் தங்களால் தீர்வு காணமுடியும். எங்களுக்குப் பின்னுக்கிருக்கும் கைகள்தான் பிரச்சினையாக இருக்கிறது“ என்று சொல்கிறார் மாகாணக் கல்வி அமைச்சின் மூத்த அதிகாரியொருவர். நிர்வாகத்தில் அரசியற் கைகள் தலையிடாமல் இருந்தால் எங்களால் பிரச்சினைகளை உருவாக்காமலே நிர்வாகத்தை வழிநடத்த முடியும் என்றும் சொல்கிறார்கள்.

இப்படிப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இதனால்தான், இன்று வடக்கின் கல்வித்துறையைப் பற்றிப் பொதுவெளியில் பலரும் கண்டபடி கதைக்கின்ற நிலை உருவாகியுள்ளது. இதேவேளை இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். பாடசாலைகளில் நடக்கின்ற பிரச்சினைகளுக்கு அங்கேயே நியாயமானமுறையில் தீர்வு கண்டால் அல்லது அப்படிப் பிரச்சினை நடக்காது பார்த்துக் கொண்டால், யாருடைய வாய்க்கும் அவல் கிடையாமல் போய்விடும். சில சந்தர்ப்பங்களில் தவறிழைக்க முற்படும் ஆசிரியர்களைக் கண்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால் அப்படி நடப்பது குறைவு.

இதனால் நீதிமன்றங்களும் நீதிவான்களும் ஆசிரியர்களைப் பொதுமைப்படுத்திக் குற்றம்சாட்டுவதாக அபிப்பிராயம் தெரிவிக்கும் போக்கு உருவாகியிருக்கிறது.

 “இருந்தாலும் இது நியாயமேயில்லை“ என்று கவலைப்படுகிறார்கள் ஆசிரியர்கள். “சமூக நல்நோக்கத்தோடு இப்படிச் செய்திகளை வெளியிடுவதும் அபிப்பிராயம் தெரிவிப்பதுமாக இருந்தாலும் யதார்த்தத்தைச் சரியாக அறியாமல், அவற்றின் தாற்பரியங்களைப் புரிந்து கொள்ளாமல் நீதிவான்கள் கருத்துகளை வெளியிட்டிருக்கின்றனர்-  தீர்ப்புகளை அளிக்கின்றனர்“ என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

இப்படியெல்லாம் நிகழும்போது ஆசிரியர்கள் மீதான மதிப்பிறக்கமே நிகழ்கிறது. இதனால் சமூகத்திலும் மாணவர்களிடத்திலும் தம்மைப்பற்றிய தவறான கற்பிதங்களே உருவாகின்றன. இந்த நிலையில் தாம் எப்படி உளநிறைவோடும் அர்ப்பணிப்போடும் கற்பித்தலைச் செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர் ஆசிரியர்கள். “சில இடங்களில் சில சம்பவங்கள் நடந்தது உண்மையாக இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்தமாக எல்லா ஆசிரியர்களையும் ஒரே நோக்கில் பார்க்க முடியுமா?“ என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

இன்றைய நிலையில் ஆசிரியர்களிடத்திலே ஒருவிதமான உளநெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்று ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை என்ற கவலை. மற்றது நீதிமன்றங்களும் நீதிபதிகளும் ஆசிரியப்பணியின் முக்கியத்துவத்தையும் ஆசிரியர்களின் உளநிலையையும் அவர்களுக்குரிய மதிப்பையும் பொருட்படுத்திக் கருத்துகளை வெளியிடவில்லை என்ற துக்கம்.

மொத்தத்தில் ஆசிரியர்களின் மதிப்பைப் பேணிக்காப்பாற்றியிருக்க வேண்டிய பொறுப்பிலிருந்து கல்வி அமைச்சுத் தவறிவிட்டது.

பிரச்சினைகள் எங்கேயும் எப்போதும் வருவதுண்டு. குடும்பங்களில் இருந்து சமூகம் வரை, துறைகள் உள்ளடங்கலாக அனைத்து  நிர்வாகங்களிலும் ஏற்படுவது இயல்பு. ஆனால், அவற்றை முடிந்தவரை விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான பொறிமுறையை வகுத்து வைத்துக் கொண்டால், எந்தப்பிரச்சினையையும் இலகுவில் தீர்த்துக்கொள்ள முடியும். அதற்காகத்தான் நிர்வாக விதிமுறைகளும் படிமுறைகளும் அதிகாரமும் வசதிகளும் உள்ளன.

வடக்கின் கல்வி மிகச் சடுதியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதற்குக் காரணம், அதிகரித்த அரசியல் தலையீடுகளும் கள்ளத்தனமான நிர்வாக நடவடிக்கைகளும்தான் என்பது பகிரங்கமானது. அவைதான் எல்லாப்பிரச்சினைகளையும் வளர்த்துப் பெருக்கிக்கொண்டிருக்கின்றன.

ஆசிரியர்கள் தொடர்பான பிரச்சினைகள், மாணவர்கள் தொடர்பான விவகாரங்கள், அதிபர், ஆசிரியர் நியமனப்பிரச்சினை, இடமாற்றங்கள், பதவி வழங்கல்கள் தொடர்பான விவகாரம் என நிறைந்திருக்கும் பிரச்சினைகளைப்பற்றி ஆராய்ந்து அதற்குத் தீர்வைக்காணும் வழிமுறைகளைச் செய்வதற்கு இன்னும் கல்வி அமைச்சு முன்வரவேணும். அப்படி முன்வராமல் பின்னிற்பதற்குக்காரணம், பகிரங்கமாக இவற்றைப்பற்றி ஆராய முற்பட்டால், தவறான, ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்குக் “கட்டளையிட்டமை“ வெளியே தெரியவரும். ஆகவே, என்னதான் நடந்தாலும் எவர் எப்படித்தான் கதைத்தாலும் கல்வி எப்படித்தான் சீர்கெட்டாலும் எல்லாவற்றையும் கண்டும் காணாதிருப்பதே சிறந்தது என்று கல்வி அமைச்சும் அமைச்சரும் உள்ளமை நன்றாகப் புரிகின்றது. இது உண்மையில் கல்வி அமைச்சுக்கு ஏற்பட்ட அவமானமும் கரும்புள்ளியுமாகும். “வடக்கின் கல்வி வரலாற்றில் இப்படியான ஒரு நிலை ஏற்பட்டதில்லை“ என்று மூத்த கல்விமான் ஒருவர் வருத்தத்தோடு சொன்னார்.

ஒரு பிரச்சினை மாதக்கணக்கில் நீடிக்கும்போது செயற்பாடுகள் சீர்குலைவது மட்டுமல்ல, அதனோடு இணைந்தவர்களுடைய உளநிலையும் பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் என்ன செய்வது என்று தெரியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது மாணவர்களின் கல்வியே. இதனால்தான் இலங்கையில் கடைசி மாகாணமாக வடக்கும் இறுதி மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்றவையும் உள்ளன.

தவிர, மாணவர்கள் என்பது எதிர்காலத்துக்குரியவர்கள். ஆகவே எதிர்காலத்துக்குரியவர்கள் பாதிக்கப்பட்டால், எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும்.

ஆசிரியர்களின் மதிப்பு உயர்வாக இருந்தால்தான் அவர்களால் மாணவர்களை வழிப்படுத்தவும் கற்பிக்கவும் முடியும். ஆகவே ஆசிரியர்களின் மதிப்பைப் பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு மாகாணக்கல்வி அமைச்சுக்குண்டு. தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீதும் மாணவர்கள் மீதும் நடவடிக்கைகளை எடுப்பதைப்பற்றியும் அவர்களை எப்படிக் கையாள்வது என்பதைப்பற்றியும் மாகாணக் கல்வி அமைச்சு சிந்திப்பது அவசியம்.

எத்தனையோ தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற வடக்கு மாகாணசபை வடக்கின் கல்வித்துறையில் நடக்கும் சீரழிவையும் நிர்வாக அலங்கோலங்களையும் பற்றி ஒரு தீர்மானம் எடுக்காமல் இருப்பது எதற்காக?

Share on Google Plus

About Education Murasu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment