தமிழ் இலக்கணத்தின் வகைகள்

இலக்கணம் என்பது ஒரு மொழியை தவறில்லாமல் கற்க பயன்படும் ஒரு விதிமுறையாகும். இந்த விதிக்கு கட்டுப்பட்டு தான் அந்த மொழிகள் இயங்கும்.

தமிழ் இலக்கணத்தில் ஐந்து வகைகள் உள்ளது

எழுத்து இலக்கணம்


மாறக்கூடிய வரி வடிவமாகவும், மாறாத ஒலி வடிவமாகவும் எழுதப்படுவதால் இது எழுத்திலக்கணம் எனப்படுகிறது. இதில் சந்தி இலக்கணமும் சேர்க்கப்படுகிறது. இரண்டு சொற்கள் சேரும் போது முதல் சொல்லின் கடைசி எழுத்திலும், இரண்டாம் சொல்லின் முதல் எழுத்திலும் வரும் வித்தியாசத்தை சொல்வதை குறிக்கும்.

முதலெழுத்து


"எழுத்தெனப்படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப"
  - தொல்காப்பியம்

"உயிரும் உடம்புமாம் முப்பது முதலே"
  - நன்னூல்

'அ' முதல் 'ஔ' வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
• உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
• மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும். மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.

சார்பெழுத்துகள்


"உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்"
  - நன்னூல்

சார்பெழுத்து

1. உயிர்மெய் எழுத்து
2. ஆய்த எழுத்து
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக் குறுக்கம்
8. ஔகாரக் குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்
எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்றன.
இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216), ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.


சொல் இலக்கணம்


எழுத்து இலக்கணத்திற்கு அடுத்து எழுத்துக்களால் ஆன சொல்லின் இலக்கணம் கூறப்படுகிறது.

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

உதாரணம்: வீடு, கண், போ,

சொல்லின் வகைகள்
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்


பொருள் இலக்கணம்


வாழ்விற்கு பொருள் தரும் கூறுகளை விளக்கி காட்டுவது பொருள் இலக்கணமாகும்.

பொருள் இரண்டு வகைப்படும். அவை,
1. அகப்பொருள்
2. புறப்பொருள்

தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும். ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள். அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.

யாப்பு இலக்கணம்


யாப்பு என்பதற்கு புலவர்களால் செய்யப்படும் செய்யுள் என்பது பொருளாகும். செய்யுளின் அர்த்தம், ஓசை, அமைப்பு ஆகியவற்றை பற்றி விரிவாக கூறுவதே யாப்பு இலக்கணமாகும்.

யாப்பு வேறு, செய்யுள் வேறு,  அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை

உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன.

குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரையசை  ஈரசைகளாவன.

குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும்.

ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும். தளை என்னும் சொல்லுக்குக் கட்டுவது, பொருந்துவது என்பது பொருளாகும். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றியும், ஒன்றாமலும் வருவது தளையாகும். இவ்வாறாக சீர்கள் இணைந்த தளைகள் பொருந்தி நின்று அடுத்து நடப்பது அடி எனப்படும். அடிகளும் அவ்வடிகளில் உள்ள சீர்களும் பொருத்தமுற தொடுக்கப்படுவது தொடையாகும். தொடை என்பது காரணப்பெயராகும்.


அணி இலக்கணம்


அணி என்பதற்கு அழகு என்று பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு போன்றவற்றை வரையறித்து கூறுவது அணி இலக்கணம் ஆகும்.

அணி பலவகைப்படும். அவற்றுள் சில,
1. தன்மையணி
2. உவமையணி
3. உருவக அணி
4. பின்வருநிலையணி
5. தற்குறிப்பேற்ற அணி
6. வஞ்சப் புகழ்ச்சியணி
7. வேற்றுமை அணி
8. இல்பொருள் உவமையணி
9. எடுத்துக்காட்டு உவமையணி
10. இரட்டுறமொழிதலணி

Share on Google Plus

About Education Murasu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment